Monday, 4 April 2022

வாழும் வள்ளலாருக்கு நன்றியும் வாழ்த்தும்

 



வாழும் வள்ளலாரால் வளரட்டும் தமிழ்நாடு



தமிழ் நாட்டில் உள்ள எந்த கோயிலுக்கு சென்றாலும் முடிந்தவரை கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தில் சாப்பிடும் பழக்கம் கொண்டவன் நான். ஆனால், மதியம் 12 மணிக்கு வழங்கப்படும் அன்னதானத்திற்காக 11 மணி முதல் வரிசையில் நிற்க வேண்டும் என்பது தான் சிரமமானது. அவசர, அவசரமாக கோயிலுக்கு செல்லும் நம்மால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வரிசையில் நிற்பது சிரமம். இதோடு, அன்னதானம் மதியம் மட்டுமே என்பதால் பல நேரங்களில் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது.

கோயில் சுற்றுப் பகுதியிலுள்ள ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டால், கொடுக்கும் பணத்திற்கு திருப்தியின்றி கிடைத்ததை சாப்பிட்டு வரும் நிலையே நிதர்சனம். இப்படித்தான் கடந்த 20ம் தேதி பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயிலுக்கு தரிசனத்திற்காக குடும்பத்தினருடன் சென்றேன். தரிசனத்திற்காக நீண்ட நேரம் ஆனது. முன்னதாக மதிய சாப்பாடு கோயில் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டலில், ஒரு சாப்பாடு ரூ.100 என்ற விலையில் 8 பேருக்கு டோக்கன் வாங்கி சாப்பிட உட்கார்ந்தோம். இந்த ஹோட்டலில் விலக இடமில்லை. அந்தளவுக்கு கூட்டம் வந்து கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்தோம். ஆனால், சாப்பிட்ட திருப்தி இல்லை. அதிகபட்சம் ரூ.60 கொடுக்கலாம். ஆனால், விலையோ ரூ.100 என்பது மிகவும் அதிகம் என்பது மட்டும் உறுதியானது.

தரிசனம் முடிந்து மதுரைக்கு கிளம்புவதற்காக தயாராகி வந்தபோது, கோயில் அன்னதான கூடத்தை கடந்து சென்றோம். இதற்காக வரிசையில் ஒரு சிலர் மட்டுமே நின்றிருந்தனர். ஆனால், சாப்பாட்டு கூடத்திற்கு அனுமதித்து கொண்டிருந்தனர். இதனால், அனைவரும் வரிசையில் நின்று சென்றோம். உள்ளே சென்றதும் மதியம் சாப்பிட்ட ஹோட்டலின் நினைவு தான் வந்தது, அந்தளவுக்கு கோயில் அன்னதான கூடம் சுத்தமும், சுகாதாரமுமாய் இருந்தது. வரிசையாக இலையை போட்டு, டம்ளர் வைத்து தண்ணீர் ஊற்றப்பட்டது. சத்தரிக்காய் கூட்டு, வாழைக்காய் பொறியல், அப்பளம், ஊறுகாய் வைத்தனர். வேண்டிய அளவுக்கு சாதம் வைத்து சாம்பார், ரசம் மற்றும் மோர் கொடுத்தனர். வேண்டிய அளவுக்கு கேட்க, கேட்க இல்லையென கூறாமல் பரிமாறினர். கடைசியில் பாயாசமும் வழங்கப்பட்டது. சுத்தமான முறையில் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவுகள் இவை. போதும் என கூறுமளவுக்கு சாதம் வழங்கப்பட்டது. சாம்பாரும், ரசமும் சிறப்பாக இருந்தது. எனக்கு ரூ. 800 செலவு மிச்சம் என்பது ஒரு புறம் என்றாலும், மனதார சாப்பிட்ட திருப்தியுடன் கைகழுவி கிளம்பினோம். முன்னதாக கோயில் அன்னதான பணியாளர்களை பரர்த்து நன்றி சொல்லி விட்டுத்தான் கிளம்பினேன்.

கோயிலில் சாப்பிட்டேன்னு சொல்றதுக்கு ஏன் இவ்வளவு பெரிய இழுவை என நீங்கள் நினைக்கலாம். காரணம் உண்டு, எனது சிறு வயது முதல் பங்குனி உத்தரத்தின் போது திருச்செந்தூர் செல்லும் பழக்கம் கொண்ட என்னால் ஒரு முறை கூட கோயில் அன்னதானத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு கூட்டம் இருக்கும். மதியம் 12 மணிக்கு மட்டுமே அன்னதானம் போடப்படும். ஆனால், இந்த முறை அப்படியல்ல காலை 8 மணி துவங்கி இரவு 8 மணி வரை என்ற வசதியை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதனால்,அன்னதானம் எங்களுக்கு சாத்தியமாயிற்று. வெட்கப்படாமல், கவுரவம் பார்க்காமல் சென்றால் முடிந்தவரை 3 வேளை உணவையும் அங்கு சாப்பிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், கடவுளை நம்புவோரின் நம்பிக்கை



விளக்காய் மாண்புமிகு தமிழக முதல்வர் இருக்கிறார் என்பதை பலரது முகங்களும் காட்டின. ஆனால், எந்த இடத்திலும் முதல்வரின் படமோ, பெயரோ இல்லை. மாண்புமிகு முதல்வரின் தினசரி மற்றும்


நாள் முழுவதும் அன்னதான திட்டம் என்பது மட்டும் தான் உள்ளது. எந்தவித விளம்பரமும் இல்லை. இப்படிப்பட்ட முதல்வருக்காகத் தான் இந்த தமிழகம் ஏங்கியது. இதை கிடைக்கும் சந்தரப்பங்களில் எல்லாம் நன்றாகவே முதல்வர் அவர்கள் பயன்படுத்தி வருகிறார் என்பதை காணமுடிகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்கள் , இந்த திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்பதற்கு திருச்செந்தூர் நாள் முழுவதும் அன்னதான திட்டம் என்பது கலங்கரை விளக்கமாய் ஒளிவீசுகிறது.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்  

எனும் வள்ளுவரின் வாக்கிற்கு பசியை பொறுத்துக்கொள்ளும் நோன்பை கடைப்பிடிப்பதை விட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும் என்கிறார் கலைஞர். இதில் பசியைப் போக்குவதே சிறந்தது என்ற வள்ளுவரின் வழிநின்று திருச்செந்தூர் கோயில் வந்து செல்வோர் யாவரும் பசியுடன் செல்லக் கூடாது என்பதால் வயிறையும், மனதையும் நிரப்பி அனுப்பும் மாமனிதராக திகழ்கிறார் முதல்வர் அவர்கள்.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள் அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்ற மகான் வள்ளலாரின் வாக்கை நிறைவேற்றி வாழும் வள்ளலாராய் வலம் வரும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், அவர்தம் சேனையாக சுற்றிச் சுழலும் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். தொடரட்டும் இந்த அறத்தொண்டு....

வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்

நன்றியுடன் மு.ஆனந்தகுமார்,

செய்தியாளர் - மதுரை . 

9443287434




2 comments:

  1. சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  2. பார்த்தேன்,படித்தேன்,ரசித்தேன்..... நானும் உங்களுடனே உணவருந்தியது போன்று கூட்டி செல்கின்றது இக்கட்டுரை....

    ReplyDelete