Friday 27 October 2023

நடிகர் விஜயும் சர்ச்சை அரசியலும்

நடிகர் விஜயும் சர்ச்சை அரசியலும்

தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர். அவரது ஒவ்வொரு படத்திலும் அரசியலை முன்நிறத்தியுள்ளார். அரசியல் வசனங்கள் அதிரும். தனது அரசியல் ஆர்வத்தால் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிடம் நெருக்கம் காட்டினார். தனது  அரசியல் ஆர்வத்திற்கு ஏற்ப தனது மகன் நடிகர் விஜயையும் வார்த்து வடித்தார்.

ஒரு கால கட்டத்தில் நடிகர் விஜய் தனக்கென தனி ரூட்டை போட்டுக் கொண்டு, தனது தந்தையை அவரது பாதையில் விட்டு விலகிச் சென்றார். ஆனால், நடிகர் விஜய் தனது உச்ச நட்சத்திரமாக இருப்பதால், அரசியல் களத்தில் தானும்  ஒரு தலைவனாவோம் என நினைத்து அதற்கேற்ப தனது கதை களத்தையும் அமைத்துக் கொண்டார்.

இன்று தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தைப் போல நடிகர் விஜய்க்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதால், தன்னால் அரசியலின் உச்சத்தை அடைய முடியும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த ரசிகர் கூட்டத்தின் முன் அவர் ஒரு அரசியல் தலைவராக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என அவரது ரசிகர்களை வைத்து சொல்ல வைத்தார்.



ஆனால் லியோ படம் தொடர்பான சர்ச்சைகள் திமுகவை சுற்றி ஒரு தரப்பினரால் முன் வைக்கப்பட்டது. இது தனது அரசியல் முன்னெடுப்பிற்கு சாதகமாக இருக்கம் என எண்ணி நடிகர் விஜயும் தற்போது வரை அமைதி காத்து வருகிறார். ஆனால் அவரது திரையுலகம் சார்ந்தவர்களே இதை மறுத்து பேசும் நிலையை உருவாக்கினார்.



நடிகர் விஜயின் படங்கள் சர்ச்சைக்கும், பிரச்னைக்கும் உள்ளாவது இன்று மட்டும் நடந்தது அல்ல. நீண்டகாலமாக தொடர்ந்து நடக்கும் ஒன்று தான். 2003ல் கீதை திரைப்படம் புதிய கீதையாக மாறியது முதல் இன்று லியோ வரை நடந்துவரும் சம்பிரதாயங்கள் தான். இந்த சர்ச்சைகள் சம்பந்தப்பட்ட திரைப்பட தயாரிப்பு தரப்பால் படத்தை பிரோமோட் செய்யும் வகையில் வேண்டுமென்றே சர்ச்சைகள் உருவாக்கப் படுவதாகவும் இன்று வரை ஒரு வாதமும் உண்டு. 

சுறா படத்தின் தோல்வி காவலன் படத்தை வெளியிட நஷ்டஈடு கொடுக்கும் அளவுக்கு சென்றது. துப்பாக்கி படத்தை நீதிமன்றம் சென்று தான் திரையிடும் நிலை ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் எதிர்ப்பால் சில காட்சிகள் நீக்கப்பட்டும், மியூட் செய்தும் தான் வெளியானது. இது நாள் வரை நடிகர் விஜய் தன்னை அதிமுக ஆதரவாளராகவே காட்டி வந்தார். அப்படிப்பட்ட நிலையில் கடந்த 2013ல் தலைவா திரைப்படம் வெளியானது. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு செல்வி ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அதிமுக அரசு தலைவா படத்தை வெளியிட தடை விதித்தது. அப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவை படக்குழுவினர் சந்திப்பதே பெரும் போராட்டமாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளுக்கு பிறகே படம் வெளியானது. இந்த பட பிரச்னையை அதிமுகவிற்கும், அவர்களது ஆதரவாளருக்கும் இடையே நடக்கும் பிரச்னையாகத்தான் பலரும் பார்த்தனர். 2014ல் கத்தி திரைப்படம் ராஜபக்சே ஆதரவாளரால் தயாரிக்கப்படுவதாகவும், மற்றொருவரின் கதை திருடப்பட்டதாகவும் பிரச்னை எழுந்தது. புலி படம் வெளியான 2015ல் வருமான வரித்துறை சோதனையை நடிகர் விஜய் எதிர்கொண்டார். பகல் காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டது. 2016ல் தெறி படம் வெளியான போது தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தது. பல மாவட்டங்களிலும், முக்கிய தியேட்டர்களிலும் இந்த படம் வெளியாகவில்லை.

2017ல் மெர்சல் படத்தில் டிஜிட்டல் இந்தியா மற்றம் ஜிஎஸ்டி வரி குறித்த வசனங்கள் அப்போதைய பாஜ தலைவர் தமிழிசை மற்றும் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரின் கடும் எதிர்ப்பு மட்டுமின்றி அரசு மருத்துவர்கள் மற்றும் கர்நாடகத்திலும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. படம் வெளியாவதற்கு முதல்நாள் வரை சென்சார் சான்று வழங்கப்படவில்லை. 

2018ல் வெளியான சர்க்கார் படமும் தன் கதையை சார்ந்திருப்பதாக எழுந்த பிரச்னை கிரெடிட் கொடுப்பதாக கூறியதால் தீர்க்கப்பட்டது. அரசின் இலவசம் குறித்த விவகாரத்தில் அதிமுகவினர் களத்தில் இறங்கி நடிகர் விஜய்க்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். இதன் வெளியீட்டு விழாவிலும் விஜய் அரசியல் பேச தவறவில்லை. 2019ல் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் பேச்சு, அதிமுக மற்றும் பாஜகவினரின்ட எதிர்ப்பை சந்தித்தது. 2021ல் மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதுடன், அவர்களது காரில் விஜய் அழைத்து செல்லப்பட்டார். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்தது மிகப்பிரபலம்.

அப்போது கொரோனா காலம் என்பதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து 100 சதவீத அனுமதி கேட்டனர். ஆனால் அரசின் அறிவுறுத்தல் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பால் 50 சதவீத அனுமதி மட்டுமே கிடைத்தது. இந்த பட சர்ச்சை தொடர்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டமும், வழக்கம் போல கதை தழுவல் விவகாரமும் அரங்கேறியது.

அந்த வரிசையில் தான் தற்போது லியோ படமும் இணைந்துள்ளது. ஆனால், துரதிஷ்டம் என்னவென்றால் நடிகர் விஜயின் அரசியல் முன்னெடுப்பிற்காக இந்த விவகாரம் விஜய் ரசிகர்கள் மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்களால் ஆளும் திமுக அரசிற்கு எதிரானதாக கொண்டு செல்லப்படுகிறது. ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். இதை யாரும் தடுக்க முடியாது, தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதுநாள் வரை நடிகர் விஜய் அதிமுக ஆதரவாளராகவே இருந்து வந்தார். முதலில் பாஜகவின் எதிர்ப்பும், தற்போது அவரகளின் மறைமுக ஆதரவும் இருப்பது தெரிகிறது.

இந்த தமிழ்நாடு நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி முதல் டிஆர், பாக்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், கமல் வரை பலரை சந்தித்துள்ளது. அந்த வரிசையில் முதல்வர் நாற்காலி பந்தயத்தில் நடிகர் விஜயையும் பார்க்க தயாராகவே உள்ளது. வாருங்கள், உங்கள் ரசிகர்களுக்கு வன்முறையற்ற, நாகரீக அரசியலை கற்று கொடுங்கள், அடுத்தாண்டு தேர்தல் களத்தில் சந்திப்போம், அதற்கு முன்பும், பின்பும் சிந்தித்து, சிந்திக்க வைப்போம் …………. 

Friday 20 October 2023

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி - 2024

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி - 2024

   நாம் அனைவரும் 2024ம் ஆண்டில் எதிர்கொள்ள இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை, வழக்கமான சம்பிரதாய தேர்தலாக கருத கூடாது. ஏனெனில் ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்காலத்தையே நிர்ணயிக்க கூடிய தேர்தலாகவே  அமைந்துள்ளது. தேர்தலின் முடிவை எதிர்நோக்கி கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீரம் முதல் குமரி வரையில் பல வகையான அரசியல் சதுரங்க விளையாட்டுகள் அரங்கேற்றப்பட்டு வருகி்ன்றன. நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையிலான தேர்தல்களையே நாம் பார்த்து வந்த நிலையில், தற்போது யார் வெற்றி பெறக் கூடாது என்ற அடிப்படையில் அரசியல் சதுரங்க ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. இந்த தேர்தலை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆளும் கட்சி கூட்டணியும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பல்வேறு மாநில கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியும் களம் கண்டாலும், இன்னும் சில கட்சிகள் இரு அணியில் இடம் பெறாமல் உள்ளன. இந்த நிலையை கூட பாரதிய ஜனதா கட்சியே தனக்காக ஒரு தனி அணியை உருவாக்கி வைத்துள்ளதாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும். இவர்கள் தேர்தலுக்கு பிந்தைய நிலையில் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதே பாஜகவின் கணக்கு. குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதை நன்கு அறிந்த பாஜக, தங்களுக்கு எதிரான வாக்குகள் ஒருங்கிணைந்து விடக்கூடாது என்பதற்காகவே, எதிர் வாக்குகளை பிளவு படுத்தும் வேலையை கணகச்சிதமாக நடத்தி வருகிறது. இதன் முடிவுகள் நூறு சதவீதம் சாதகமாக கிடைக்காவிட்டாலும், முடிந்தவரை எதிர்அணிக்கு போகும் வாக்குகளை பிரிக்கும் பணியில் குறிப்பிட்ட அளவவாவது வெற்றியாக்கும் வேலையில் ஓரளவுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே பாஜகவின் கணக்கு.



தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி  39 தொகுதிகளிலும் உறுதி செய்யப் பட்டது என்றும், அதிமுக-பாஜக கூட்டணி இணைந்தே தேர்தலை சந்தித்தாலும் குறிப்பிடும் படியான வெற்றி கிடைக்காது என்றும், கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினரின் வாக்குகள் அப்படியே திமுக கூட்டணிக்கு போய்விடும் என்றும், தமிழ்நாட்டில் பாஜகவினரின் எதிர்மறை அரசியல் சதுரங்கம் நிச்சயம் வெற்றியைத் தராது என்றே உளவு அறிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்துள்ளன. இதன்பிறகு எடுக்கப்பட்ட முடிவின்படியே தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு என்றும், தனித்து போட்டியிடுவது என்றும் இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டு காய்கள் நகர்த்தப் படுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றி என்பது தேர்தலுக்கு பின்னர் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பெரும் சிக்கலானதாக மாறிவிடும். இந்த நிலையை தவிர்க்கவே அதிமுகவை தனி அணியாக போட்டியிடச் செய்து, திமுக கூட்டணியில் சீட்  வாய்ப்பு கிடைக்காதவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் சீட் கிடைக்காதவர்களை பிரித்து அதிமுக கூட்டணிக்கு கொண்டு வருவது என்றும், அவர்கள் சார்ந்த வாக்குகளையும், முடிந்தவரை சிறுபான்மை வாக்குகளை திமுகவிடம் இருந்து பிரித்து திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது என்பது தான் பாஜவின் திட்டம். இந்த திட்டமே தற்போது அரங்கேறிவருகிறது.

திமுகவில் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள தலைவர்களுக்கு ரைடுகளால் பிரேக் போடுவது, அதிமுகவிற்கு சாதகமாக சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பது உள்ளி்ட்ட நடவடிக்கைகள் தங்களுக்கு சாதகமாக வராவிட்டாவலும், திமுக கூட்டணிக்கு எதிராக கொண்டு போக முடியும் என்ற இலக்கின் படியே தேசிய ஜனநாயக கூட்டணியில்இருந்து அதிமுக பிரிந்தது, தற்போது சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து அதிமுக தனது தரப்பு காயை நகர்த்தி வருகிறது.  அதிமுகவின் அரசியல் முன்னெடுப்புகளும் இதை உறுதி செய்கின்றன.


Monday 4 April 2022

வாழும் வள்ளலாருக்கு நன்றியும் வாழ்த்தும்

 



வாழும் வள்ளலாரால் வளரட்டும் தமிழ்நாடு



தமிழ் நாட்டில் உள்ள எந்த கோயிலுக்கு சென்றாலும் முடிந்தவரை கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தில் சாப்பிடும் பழக்கம் கொண்டவன் நான். ஆனால், மதியம் 12 மணிக்கு வழங்கப்படும் அன்னதானத்திற்காக 11 மணி முதல் வரிசையில் நிற்க வேண்டும் என்பது தான் சிரமமானது. அவசர, அவசரமாக கோயிலுக்கு செல்லும் நம்மால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வரிசையில் நிற்பது சிரமம். இதோடு, அன்னதானம் மதியம் மட்டுமே என்பதால் பல நேரங்களில் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது.

கோயில் சுற்றுப் பகுதியிலுள்ள ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டால், கொடுக்கும் பணத்திற்கு திருப்தியின்றி கிடைத்ததை சாப்பிட்டு வரும் நிலையே நிதர்சனம். இப்படித்தான் கடந்த 20ம் தேதி பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயிலுக்கு தரிசனத்திற்காக குடும்பத்தினருடன் சென்றேன். தரிசனத்திற்காக நீண்ட நேரம் ஆனது. முன்னதாக மதிய சாப்பாடு கோயில் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டலில், ஒரு சாப்பாடு ரூ.100 என்ற விலையில் 8 பேருக்கு டோக்கன் வாங்கி சாப்பிட உட்கார்ந்தோம். இந்த ஹோட்டலில் விலக இடமில்லை. அந்தளவுக்கு கூட்டம் வந்து கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்தோம். ஆனால், சாப்பிட்ட திருப்தி இல்லை. அதிகபட்சம் ரூ.60 கொடுக்கலாம். ஆனால், விலையோ ரூ.100 என்பது மிகவும் அதிகம் என்பது மட்டும் உறுதியானது.

தரிசனம் முடிந்து மதுரைக்கு கிளம்புவதற்காக தயாராகி வந்தபோது, கோயில் அன்னதான கூடத்தை கடந்து சென்றோம். இதற்காக வரிசையில் ஒரு சிலர் மட்டுமே நின்றிருந்தனர். ஆனால், சாப்பாட்டு கூடத்திற்கு அனுமதித்து கொண்டிருந்தனர். இதனால், அனைவரும் வரிசையில் நின்று சென்றோம். உள்ளே சென்றதும் மதியம் சாப்பிட்ட ஹோட்டலின் நினைவு தான் வந்தது, அந்தளவுக்கு கோயில் அன்னதான கூடம் சுத்தமும், சுகாதாரமுமாய் இருந்தது. வரிசையாக இலையை போட்டு, டம்ளர் வைத்து தண்ணீர் ஊற்றப்பட்டது. சத்தரிக்காய் கூட்டு, வாழைக்காய் பொறியல், அப்பளம், ஊறுகாய் வைத்தனர். வேண்டிய அளவுக்கு சாதம் வைத்து சாம்பார், ரசம் மற்றும் மோர் கொடுத்தனர். வேண்டிய அளவுக்கு கேட்க, கேட்க இல்லையென கூறாமல் பரிமாறினர். கடைசியில் பாயாசமும் வழங்கப்பட்டது. சுத்தமான முறையில் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவுகள் இவை. போதும் என கூறுமளவுக்கு சாதம் வழங்கப்பட்டது. சாம்பாரும், ரசமும் சிறப்பாக இருந்தது. எனக்கு ரூ. 800 செலவு மிச்சம் என்பது ஒரு புறம் என்றாலும், மனதார சாப்பிட்ட திருப்தியுடன் கைகழுவி கிளம்பினோம். முன்னதாக கோயில் அன்னதான பணியாளர்களை பரர்த்து நன்றி சொல்லி விட்டுத்தான் கிளம்பினேன்.

கோயிலில் சாப்பிட்டேன்னு சொல்றதுக்கு ஏன் இவ்வளவு பெரிய இழுவை என நீங்கள் நினைக்கலாம். காரணம் உண்டு, எனது சிறு வயது முதல் பங்குனி உத்தரத்தின் போது திருச்செந்தூர் செல்லும் பழக்கம் கொண்ட என்னால் ஒரு முறை கூட கோயில் அன்னதானத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு கூட்டம் இருக்கும். மதியம் 12 மணிக்கு மட்டுமே அன்னதானம் போடப்படும். ஆனால், இந்த முறை அப்படியல்ல காலை 8 மணி துவங்கி இரவு 8 மணி வரை என்ற வசதியை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதனால்,அன்னதானம் எங்களுக்கு சாத்தியமாயிற்று. வெட்கப்படாமல், கவுரவம் பார்க்காமல் சென்றால் முடிந்தவரை 3 வேளை உணவையும் அங்கு சாப்பிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், கடவுளை நம்புவோரின் நம்பிக்கை



விளக்காய் மாண்புமிகு தமிழக முதல்வர் இருக்கிறார் என்பதை பலரது முகங்களும் காட்டின. ஆனால், எந்த இடத்திலும் முதல்வரின் படமோ, பெயரோ இல்லை. மாண்புமிகு முதல்வரின் தினசரி மற்றும்


நாள் முழுவதும் அன்னதான திட்டம் என்பது மட்டும் தான் உள்ளது. எந்தவித விளம்பரமும் இல்லை. இப்படிப்பட்ட முதல்வருக்காகத் தான் இந்த தமிழகம் ஏங்கியது. இதை கிடைக்கும் சந்தரப்பங்களில் எல்லாம் நன்றாகவே முதல்வர் அவர்கள் பயன்படுத்தி வருகிறார் என்பதை காணமுடிகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்கள் , இந்த திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்பதற்கு திருச்செந்தூர் நாள் முழுவதும் அன்னதான திட்டம் என்பது கலங்கரை விளக்கமாய் ஒளிவீசுகிறது.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்  

எனும் வள்ளுவரின் வாக்கிற்கு பசியை பொறுத்துக்கொள்ளும் நோன்பை கடைப்பிடிப்பதை விட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும் என்கிறார் கலைஞர். இதில் பசியைப் போக்குவதே சிறந்தது என்ற வள்ளுவரின் வழிநின்று திருச்செந்தூர் கோயில் வந்து செல்வோர் யாவரும் பசியுடன் செல்லக் கூடாது என்பதால் வயிறையும், மனதையும் நிரப்பி அனுப்பும் மாமனிதராக திகழ்கிறார் முதல்வர் அவர்கள்.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள் அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்ற மகான் வள்ளலாரின் வாக்கை நிறைவேற்றி வாழும் வள்ளலாராய் வலம் வரும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், அவர்தம் சேனையாக சுற்றிச் சுழலும் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். தொடரட்டும் இந்த அறத்தொண்டு....

வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்

நன்றியுடன் மு.ஆனந்தகுமார்,

செய்தியாளர் - மதுரை . 

9443287434